வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்த கங்கை அமரனின் பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் பதில் அளித்துள்ளனர்.
சமீபத்தில் இயக்குநர் கங்கை அமரன், தனது மூத்த மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல், தனது மகனுக்கு கால்ஷீட் கொடுத்திருந்த அந்த நடிகர், அவர் நடித்த ஒரு படம் வெற்றி அடைந்ததும், அடுத்து அதே இயக்குநரின் படத்தில் நடிக்கச் சென்று விட்டார். அவருடனான படத்தை நம்பி இருந்ததால், வெங்கட் பிரபுவின் அடுத்தப் படம் தாமதமாகி விட்டது என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பேட்டியின் அந்தத் துணுக்கு வைரல் ஆன நிலையில், அந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்ற யூகங்களும் வெளியாகின.
இந்த நிலையில்தான், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘சிவகார்த்திகேயன் எனக்கு எப்போதுமே சிறந்த நண்பர், சகோதரர் போன்றவர். இது குறித்து பல யூகங்களும், சர்ச்சைகளும் வலம் வருகின்றன.
ஒரு தந்தையாக தனது மகனின் படம் தாமதமாகும்போது அவருக்கு ஏற்படும் விரக்தி இயல்பானதே. ஒருவேளை அவருக்கு முழுமையான விஷயங்கள் தெரிந்திருக்காது. அதற்காக நான் அவரை குறை சொல்ல மாட்டேன்.
நான் மிகவும் அமைதியான ஒரு நபர். என்னுடைய படங்கள் என வரும்போது என்னுடைய பணிகள் குறித்த எந்தத் தகவலையும் யாரிடமும் நான் பகிர்ந்துகொள்ள மாட்டேன், என் அப்பாவிடமும் கூட. பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அவ்வளவுதான். அதில் எந்த மனக்கசப்பும் இல்லை.
காலமும் நல்ல கதையும் கூடிவரும்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவேன். ஆகவே தயவு செய்து இது எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் என்னுடைய அடுத்தப் படத்தில் பிஸியாக இருக்கிறேன். எனது சகோதரனின் ‘சேயோன்’ படத்துக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயனும் ஒரு பதிவினைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘சார் நாம் எல்லாம் ஒரே குடும்பம். இதுக்கு போய் நீங்க சீரியஸாக பதில் அனுப்பிட்டு இருக்கீங்க. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களின் அடுத்தப் பணிக்கும் எனது வாழ்த்துக்கள்.
இதை நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். நான் எப்போதுமே வெங்கட் பிரபுவின் ரசிகன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’’ என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.














