மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சமீபத்தில் 60 வயது விவசாயி ஒருவரிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். தனக்கு கால் வலி இருப்பதாக அவர் கூறியதால், அவர் மீது இரக்கப்பட்ட முதியவர் அவரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் தேநீர் சாப்பிட தனது வீட்டுக்கு விவசாயியை அழைத்தார்.
அங்கு அவரை உல்லாசத்துக்கு அழைத்து அதை வீடியோவில் ரகசியமாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் ஒரு கும்பல் முதியவரை சுற்றி வளைத்து ரூ.7 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது. சமூக அவமானத்துக்கு பயந்து அவர் முதலில் ரூ.5,000-ஐ முன்பணமாக கொடுத்தார். அதன்பின் தனது நிலத்தை விற்று பணம் கொடுக்க முயன்றார். இந்த கும்பலின் தொந்தரவு அதிகமானதால், போலீஸில் இச்சம்பவம் குறித்து விவசாயி புகார் அளித்தார்.
இதையடுத்து மோசடி கும்பலை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில் மோசடியில் சிக்கிய 16 நபர்கள் எச்ஐவி பாதிப்பு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தன.
இந்தப் பெண் மூலம் அவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வீடியோவில் உள்ள நபர்களை கண்டுபிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். எச்ஐவி பாதிப்பு பெண் ஒருவர் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது 25 லட்சத்துக்கும் அதிகமானோர், எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 66,400 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்படுகிறது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெறும் நபர்களாக உள்ளனர். இந்நிலையில் எச்ஐவி பாதிப்பு பெண் ஒருவர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு எச்ஐவி தொற்றை பரப்பி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















