ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கும் கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளார். இதனால், டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பேரணிக்கு முன்னதாக, இண்டியா கூட்டணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று அக்.12-ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு ராகுல் காந்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
நேற்று மாலை மின்னஞ்சல் வாயிலாகத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது முடிவையும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் அலுவலகத் தகவல்களின்படி, ’எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. எனவே, இவ்விவகாரம் தொடர்பாகத் தலைவர்களைச் சந்திப்பது பொருத்தமானதாக இருக்காது.
அரசியலமைப்பு அமைப்பின்படி, அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் நிர்வாக ரீதியாகத் தலையிட முடியாது’ என்றும் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுக விரும்பினால், சட்டப்பூர்வ வழிமுறைகளை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய தனது மனுவில் ராகுல் காந்தி, ’வாக்குத் திருட்டை’ தடுத்தல், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நிறுத்துதல் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் செயல்முறை மீதான எதிர்க்கட்சிகளின் அதிருப்தியே இன்று நடைபெறவுள்ள இந்தப் பேரணிக்குக் காரணமாகும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீண்ட காலமாக வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
எஸ்ஐஆர் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தியத் தலைமை நீதிபதி (CJI), அவர்களைச் சந்திக்க மறுத்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியின் போது தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவும், இது தொடர்பான மனுவைச் சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளபடி செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட குடிமக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணி இந்தியா கேட்டிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மதியம் 1.00 மணிக்கு கிளம்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தாலும் டெல்லி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் போராட்டத்தையும் சமளிக்க டெல்லி காவல் துறை பல முன் ஏற்படுகளை செய்துள்ளது. முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக இண்டியா கூட்டணித் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று குடியரசுத் தலைவரையும் சந்தித்திருந்தனர்.
