1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் மட்டுமல்ல; அது தேசத்தின் ஆன்மா; ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கான கேடயம்; ஒவ்வொரு குரலின் வலிமை; நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் பாதுகாவலர்; அநீதிக்கு எதிரான நமது மாபெரும் ஆயுதம்.
அரசியலமைப்பு தினத்தன்று, எனது உறுதிமொழியைப் புதுப்பிக்கிறேன்; எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் அதை (அரசியலமைப்பு) பாதுகாப்போம், ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்” என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,“அரசியலமைப்பு தினட நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்ட அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.
இன்று, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் ஆகியவற்றைப் பாதுகாப்பதே நமது மிகப்பெரிய தேசியப் பொறுப்பாகும். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைப் பேணவும் அரசியலமைப்பை பாதுகாப்போம்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு லக்னோவில் `சம்விதான் ரக் ஷா மார்ச்’ நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது அரசியலமைப்பின் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கொண்டிருக்கும் அவமதிப்பையும் அக்கறையின்மையையும் காட்டுகிறது. இருப்பினும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று கூறினார்.
