கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராவுல் ஜான் அஜுவின் ஏஐ சாதனைகளைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இவரது பணி பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்ப்பதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஷ்யாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஏஐ ஜர்னி 2026’ மாநாட்டில், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுடன் இணைந்து இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் உரையாடிய புதின், ‘ஏஐ ரீம் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான (சிடிஓ) அஜுவைச் சந்தித்தார். அப்போது அவர், “இறுதியில் உங்கள் பணி, பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ அழைப்பை நனவாக்க உதவுகிறது. ஏனெனில், இளைஞர்கள் தங்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்த அது உதவுகிறது” என்று அஜுவிடம் கூறினார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட ‘பிரிவு 301’ அறிக்கையில், உற்பத்தித் துறையில் அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வழிவகுக்கும் கொள்கைகளை இந்தியா பின்பற்றுவதாகவும், அதனால் ஏற்படும் உலகளாவிய சிக்கல்களைச் சரிசெய்யத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
‘மேக் இன் இந்தியா’, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் (பிஎல்ஐ), ஆத்மநிர்பர் பாரத், இந்திய பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளை (ஐபிஇஎஃப்) ஆகியவை இதற்குக் காரணமான முக்கிய முயற்சிகள் என்றும், குறிப்பாக எஃகு, சூரிய ஆற்றல், சுகாதாரம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறைகளில் இவை உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இந்த விமர்சனம் வெளியான சில நாட்களில் புதின் மேக் இன் இந்தியா’வுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் ‘இந்தியாவின் ஏஐ சிறுவன்’ என்றும் ‘ராவுல் தி ராக்ஸ்டார்’ என்றும் அழைக்கப்படும் அஜு, கேரளாவைச் சேர்ந்தவர். வழக்கமான பொறியியல், கணினி அறிவியல் பின்னணி இல்லாமல், வடக்கு எடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வணிகவியல் படித்துக்கொண்டே ஏஐ துறையில் தடம் பதித்துள்ளார்.
ஒன்பது வயதில் சுயவிருப்பத்துடன் தொழில்நுட்பத்தைக் கற்கத் தொடங்கிய அஜு, தற்போது ‘ஏஐ ரீம் டெக்னாலஜிஸ்’ மூலம் திங்க்கிராஃப்ட், ரெஸ்க்யூ ஏஐ, மீபாட் போன்ற ஏஐ கருவிகளை உருவாக்கியுள்ளார். மேலும், ‘திங்க்கிராஃப்ட் அகாடமி’ மூலம் தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களுக்கும் ஏஐயை எளிமையாகக் கற்றுக்கொடுத்து வருகிறார். எட்டு டெட்எக்ஸ் உரைகளை நிகழ்த்தி, ஐஐடிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் பயிலரங்குகளை நடத்தியுள்ள இவரை, இணையத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
