கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 292 எம்.பி.க்கள் இருந்தனர். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் உடைந்தது. அந்த கட்சியின் 20 மக்களவை எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர். இதனால் பாஜக கூட்டணியின் பலம் 318 ஆக அதிகரித்தது. அசாம் மாநிலம் நகோன் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன்காரணமாக மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக அதிகரித்திருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்டணிக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மத்திய அரசுக்கு கூடுதலாக 41 எம்.பி.க்கள் மட்டுமே தேவை என்ற சூழலில் திமுக (22), சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (4) உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்கக்கூடும் என்றும் சமாஜ்வாதி (37) உள்ளிட்ட சில கட்சிகள் புறக்கணிக்கக்கூடும்.
மாநிலங்களவை நிலவரம்
ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கடந்த ஏப்ரலில் பாஜகவில் இணைந்தனர். இதேபோல கடந்த ஜூலையில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 151 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த அவையில் தற்போது 243 எம்.பி.க்கள் உள்ள நிலையில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற 162 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக கூட்டணிக்கு திமுக (8), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (4) உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
