சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) நிர்மாணிக்கப்பட்ட கோயம்பேடு மொத்தவிற்பனை அங்காடி வளாகம், அங்காடி நிர்வாகக் குழுவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி, வளாகக் கடைகள் அனைத்தும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவற்றுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அதன்படி, கடந்த 2021-24-ம் தொகுப்பாண்டிற்குரிய உரிமம் புதுப்பிக்காதவர்களை கண்டறிந்து, கடைகளைமூடி முத்திரையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை, மொத்தமாக 60 கடைகள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது.
காய்கறி மற்றும் மலர் அங்காடியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, உத்தரவின் பேரில், கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்மு. இந்துமதி முன்னிலையில் கடந்த 2021 முதல் 2023 வரை உரிமம் புதுப்பிக்காத 7 கடைகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது.
மேலும், உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மே.31-ம் தேதிஇறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.