பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. அதில் இருந்து மீண்டு சாதாரண பாஸ்கர், லக்கி பாஸ்கர் ஆனாரா என்பது படம்.
1992-ல் நடக்கிறது கதை. பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. அந்த மோசடிக்கு வங்கிகள் எப்படி துணையாக இருந்தன என்பதைப் பேசுகிறது இந்தப் படம். துல்கரின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம், தெளிவான திரைக்கதையோடு நம்மை ஈர்க்கிறது.
வங்கி ரசீது மூலம் நடக்கும் ஊழல்கள், வங்கிகளின் பெருந்தலைகள் நடத்தும் பண நாடகம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தின் பின்ன ணியில் கைமாறும் பகீர் மோசடிகள் என கொஞ்சம் சிக்கலான கதைதான் என்றாலும் அதைத் தெளிவாகச் சொன்ன விதத்தில் வெற்றி பெறுகிறது வெங்கி அட்லூரியின் டீம்.
வழக்கமான காட்சிகளுடன் தொடங்கும் முதல் சில நிமிடங்கள் மெதுவாக நகர்ந்தாலும் முதன்மை கேரக்டரான பாஸ்கர், பணத்துக்காக ஏதோ செய்யப் போகிறான் என்று தெரிந்ததும் இழுத்து அமர வைக்கிறது திரைக்கதை. அதற்கு நிமிஷ் ரவியின் அழகான ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் 90-களின் மும்பையை கண்முன் நிறுத்தும் கலை இயக்குநரின் பங்களிப்பும் கை கொடுக்கின்றன.
தெருவில் நின்று ‘பணத்தை வச்சுட்டு போ’ என கறார் காட்டுகிற கடன்காரரிடம் அவமானப்படுவது, இன்னொரு ‘வடாபாவ்’ வாங்கிக் கொடுக்க முடியாத தந்தையாகத் தவிப்பது, பணத்துக்காக நேர்மையான ஒருவன் தடம் மாறும் போது ஏற்படும் பதற்றம், குடும்பத்துக்காக ஆரம்பித்து பணம் எனும் போதைக்கு அடிமையாவது என அனைத்து உணர்வுகளையும் அழகாகக் கடத்துகிறார், துல்கர் சல்மான். மொத்தப் படத்தையும் நடிப்பால் தாங்கிப் பிடிப்பதும் அவரே.
நாயகி மீனாட்சி சவுத்ரியை ‘கிளாமர் டால்’ ஆக்காமல் கதையோடு பயணிக்க வைத்திருப்பது சிறப்பு. அதிக வேலை இல்லை என்றாலும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். ராம்கி, சச்சின் கெடேகர், சாய்குமார், டினு ஆனந்த் என துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
‘வேகமா ஓடுற வண்டியும், வேகமா வர்ற பணமும் என்னைக்காவது ஒருநாள் கீழத் தள்ளிரும்’, ‘ஜெயிச்சுட்டு தோத்துப் போனா, தோல்விதான் ஞாபகம் இருக்கும். தோத்துட்டு ஜெயிச்சா அந்த வெற்றி சரித்திரத்துல நிற்கும்’, ‘ஒரு அரைமணி நேரம் நான் நினைச்சபடி நடக்கலைங்கறதுக்காக, வாழ்க்கையை வெறுத்திட முடியுமா?” என்பது போன்ற பல வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
நவீன் நூலியின் படத்தொகுப்பு சிறப்பு என்றாலும் முதல் பாதியில் இன்னும் தாராளமாகக் குறைத்திருக்கலாம். சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் முழு திரையனுபவத்தைத் தருகிறான் இந்த லக்கி பாஸ்கர்!