உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார் தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.
இந்த பயணம் பொதுவாக ஏப்ரல் – மே முதல் அக்டோபர் – நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சார் தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த 10-ம் தேதி உத்தராகண்டில் தொடங்கியது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அனைவரும் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வதை உத்தராகண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் கேதார்நாத்திலுள்ள சிவனை தரிசிக்க வார இறுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். தரிசனத்துக்காக கேதார்நாத் அருகிலுள்ள சீதாப்பூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து வரும் 31-ம் தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு பக்தர்கள் பெயர் பதிவு செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேதார்நாத் சிவன் கோயில் அருகே பக்தர்கள் ஏராளமான பேர் காத்திருப்பதால் சீதாப்பூரிலுள்ள மையத்தில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேதார்நாத்திலிருந்து சீதாப்பூர் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் கூட்டம் குறைந்த பின்னர் சீதாப்பூரிலிருந்து பக்தர்கள் கேதார்நாத் வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது. எனவே, கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்ய தாமதமாகும் என்பதால் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.