மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஷாஜகான் ஈடுபட்டுவந்தார். உயர்நீதிமன்றம் விடுத்தகெடுவையடுத்து ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்போவதாக மேற்கு வங்க அரசு கூறியது. இதை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால், ஷேக்ஷாஜகானை மாலை 4.30 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நேற்று மீண்டும் கெடுவிதித்தார். இதையடுத்து வேறுவழியின்றி, ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் சிபிஐயிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
ஷாஜகானை பாதுகாக்க முயன்ற மேற்கு வங்க சிஐடி போலீஸாருக்கு, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், இது குறித்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில் ஷாஜகானுக்குசொந்தமான ரூ.12.78 கோடி சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.