ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீரர்கள் மற்றும் 8 ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தொடர் வரும் நவம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற உள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இதுவரை இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் ஆகிய 4 பேர் தகுதிபெற்றுள்ளனர். மீதம் உள்ள 4 இடங்கள் தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் முடிவில் தெரியவரும்.
அதேவேளையில் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இரட்டையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில் ஏடிபி பைனல்ஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் விளையாடும் ஜோடிகள் முடிவாகி உள்ளன. பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த நதானியேல் லாம்மன்ஸ், ஜாக்சன் வித்ரோ ஜோடி தங்களது முதல் சுற்றில் மோனாக்கோ ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
அதேவேளையில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தது. இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் தொடரில் விளையாட போபண்ணா-எப்டன் ஜோடி தேர்வாகி உள்ளது.