ஆயிரம் ஆண்டுகள் பழமையான 39 கோயில்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு ரூ.72.80 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம் பிடித்து நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 46 மாதங்களில் ரூ.74.51 கோடி மதிப்பீட்டில் 114 புதிய மரத்தேர்கள் செய்திடவும், ரூ.16.20 கோடி மதிப்பீட்டில் 64 மரத்தேர்களை மராமத்து செய்திடவும், ரூ.26.81 கோடி மதிப்பீட்டில் திருத்தேர்களை பாதுகாக்க 183 கொட்டகைகள் அமைத்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித் தேர்கள் செய்திட பணிகள் தொடங்கப்பட்டு, அதில் பெரியபாளையம் தங்கத்தேர் மற்றும் திருத்தணி வெள்ளித்தேர் பணிகள் நிறைவுபெற்று பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதர தேர் திருப்பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். ரூ.545 கோடி மதிப்பீட்டில் 1000 ஆண்டு பழமையான கோயில்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 39 கோயில்கள் பணி நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.