பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னியரசு காட்டு யானைக்கு மிகவும் அருகில் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதுமலை மற்றும் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, புதர் மறைவில் இருந்த புலியை நெருங்கிச் சென்றதாகவும், பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டு யானைக்கு மிக அருகில் சபாரி வாகனம் கொண்டு செல்லப்பட்டதாகவும் வீடியோக்களில் இடம்பெற்றிருந்தது.
இந்த காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வன உயிரின பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னியரசுவின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “யானைக்கு அருகில் செல்லும் வாகனத்தின் எண் வீடியோ காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யார் எந்த பதவியில் இருந்தாலும் வனத்துறை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.














