ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

0
89

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 8 பேருக்குஎதிராக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன் அமலாக்கத் துறை நேற்று துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு வரும் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் லாலுவின் மனைவி ராப்ரிதேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா மீது ஏற்கெனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here