கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இண்டியா கூட்டணியை சார்ந்த மாணவர் அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரைக்கும் நபர்கள் மட்டுமே பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளன.
மகா கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். ஆனால் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், கல்வி நடைமுறை குறித்தும் நாடாளுமன்றத்தில் பேச அவர் மறுக்கிறார். கல்வி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், நாட்டின் வளங்களை அதானி, அம்பானிக்கும் வழங்குவது மட்டுமே மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது.
இண்டியா கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. எனினும் கல்வி நிறுவனங்கள் விவகாரத்தில் நாம் ஒருமித்து செயல்படுகிறோம். அனைத்து கல்வி நிறுவனங்களில் இருந்தும் ஆஎஸ்எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் நமது நாடு அழிவை சந்திக்கும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.