தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தது கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அங்கிருந்து நேராக சத்தியமூர்த்தி பவன் சென்றார். திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைத்தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப் படத்துக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சிக்கு பலம் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடிமட்டம் வரை பலப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பை வழங்கும்” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017 ஜூன் மாதம் இந்திரா காந்தி நினைவு நூலகத்தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவன் வந்திருந்தார்.
அதன்பின் பலமுறை தமிழகம் வந்திருந்தாலும், சுமார் 8 ஆண்டுகள் 11 மாதங்களுக்குப் பிறகு நேற்றுதான் அவர் மீண்டும் கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.
இதனால் தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் காணப்பட்டனர். பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 1 மணியளவில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை செல்வப்பெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் வழி அனுப்பி வைத்தனர்.















