ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே லீக் சுற்றை தலா 18 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்திருந்தன. நிகர ரன் விகித அடிப்படையில் ஆர்சிபி அணி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே இந்த சீசனில் மிகவும் நிறைவான அணிகளாகத் திகழ்கின்றன. கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அதிரடியான பேட்டிங் மற்றும் கடந்த சீசன்களைக் காட்டிலும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பந்துவீச்சுப் படை ஆகியவற்றைக் கொண்டே கட்டமைத்துள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இந்த சீசனில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது. தொடக்க வீரராக களம் இறங்கும் ஜாம்பவான் விராட் கோலியின் அபார அனுபவமும், பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் வேகப்பந்து வீச்சு கூட்டணியின் பங்களிப்பும் அந்த அணிக்கு மிகப்பெரிய அளவில் பலன் அளித்துள்ளன. பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், வெங்கடேஷ் ஐயர், டிம் டேவிட், கிருணல் பாண்டியா ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
தங்கள் சொந்த மைதானம் அல்லாத பிற மைதானங்களிலும் வெற்றி பெறும் திறன் மற்றும் நூலிழையில் நகரும் பரபரப்பான போட்டிகளை வெற்றிகரமாக முடிக்கும் சாமர்த்தியம் ஆகியவை, லீக் சுற்றில் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறந்த அணிகளில் ஒன்றாக ஆர்சிபியை மாற்றின. அதுமட்டுமின்றி, தரம்சாலா மைதானத்தின் சுழல் மற்றும் வேகம் குறித்த நிலவரத்தை அறிந்திருப்பது ஆர்சிபிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. ஏனெனில், இதே மைதானத்தில் கடந்த 17-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி கண்டிருந்தது.
மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களின் அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சுப் படை மற்றும் எதிரணியின் அழுத்தத்தை தங்களுக்குள் துளியும் புகவிடாத டாப்-ஆர்டர் பேட்டிங் வரிசையின் பலத்தால் பிளே-ஆஃப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில், திறம்பட விளையாடும் சாய் சுதர்சன், அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் ஆகியோர் அணிக்குத் தேவையான ஸ்திரத்தன்மையையும் அதே நேரத்தில் அதிரடி ஆட்டத்தையும் சரிசமமாக வழங்கி வருகின்றனர்.
இருப்பினும் இந்த சீசனின் பிற்பாதியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தனித்துத் தெரியச் செய்தது அவர்களின் பந்துவீச்சு தான். முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை புதிய பந்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். அதே வேளையில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி ஆட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
தரம்சாலா ஆடுகளம் பவுன்ஸுக்கு அதிகம் கைகொடுக்கும் என்பதால் ராபாடா, விராட் கோலிக்கு தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுக்கக்கூடும். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளபில் சால்ட்டுக்கும் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சு துறை சவால் தரக்கூடும். மறுமுனையில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோரது திறனை ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் கூட்டணி கடுமையாக சோதனைக்கு உட்படுத்தக்கூடும். இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி நடப்பு சீசனில் எதிரணிகளின் டாப்-ஆர்டர் வரிசையை ஆரம்பத்திலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது.
குஜராத் அணி தங்களின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை பெரிதும் நம்பி உள்ளது. இதனால் முதல் 6 ஓவர்கள் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக அமையக்கூடும். மிடில் ஓவர்களில் ரஷித் கானுக்கும் வலதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் நிறைந்த ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசைக்கும் இடையேயான மோதல் போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பதாக அமையலாம். இருப்பினும், சுழற்பந்து வீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடக்கூடிய ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டம், பெங்களூரு அணிக்கு ரஷித் கானின் சவாலை முறியடிப்பதற்கான ஒரு முக்கிய எதிர்-ஆயுதமாக இருக்கக்கூடும்.
இரு அணியிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர்கள் பலர் உள்ளனர். இதனால் தகுதி சுற்று 1 ஆட்டமானது ஆர்சிபி அணியின் ஆழமான பேட்டிங் வரிசைக்கும், குஜராத் அணியின் இடைவிடாத அச்சுறுத்தும் பந்துவீச்சுக்கும் இடையே நடக்கும் மோதலாக அமையக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
தகுதி சுற்று 1-ல் தோல்வி அடையும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாடும். இந்த ஆட்டத்தில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியும் பங்கேற்கும். எலிமினேட்டர் ஆட்டத்தில் நாளை (27-ம் தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.















