மொராக்கோ கனவைத் தகர்த்த பிரான்ஸ் – பெனால்டியை நழுவ விட்டாலும் எம்பாப்பே அபாரம் |FIFA WC 2026 காலிறுதி

0
15

கிலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பலே தலா ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை வீணடித்த எம்பாப்பே, இரண்டாவது பாதியில் கோலும், ஒரு கோலுக்கான (அசிஸ்ட்) உதவியும் செய்து ஆட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்தார்.

மொராக்கோ அணியின் முக்கிய ஸ்ட்ரைக்கரும் உந்து சக்தியுமான சைபாரி காயம் காரணமாக ஆட முடியாமல் போனதால் மொராக்கோ அணி இதற்கு முன்பு இந்தத் தொடரில் பார்த்த உத்வேகம் கொண்ட அணியாக இல்லாமல் சோர்வான அணி போல் ஆடியது. இருந்தாலும் அவர்களுக்கான தருணங்கள் இருந்தன. அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை.

போட்டியின் 25-வது நிமிடத்தில் மஸ்ராவியின் தவறான டேக்கிளால் பிரான்ஸுக்கு பெனால்டி கிடைத்தது. ஆனால், எம்பாப்பே எடுத்த ஷாட்டை யாசின் பௌனூ எளிதாகத் தடுத்து மொராக்கோவுக்கு நம்பிக்கை அளித்தார்.

அதன்பிறகும் பிரான்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. டயோ உபமேகானோ மற்றும் டெசிரே டுவே ஆகியோருக்கு கிடைத்த வாய்ப்புகள் கோலாக மாறவில்லை. முதல் பாதி கூடுதல் நேரத்தில் லூகாஸ் டின்யே தொலைவில் இருந்து அடித்த அசத்தலான ஷாட் குறுக்குக் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை கோல்களாக மாற்றியது. 60-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் வலையின் தூர மூலையை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட்டை அடித்து கோல் கணக்கைத் தொடங்கினார். இந்த கோலுக்கு 6 நிமிடங்கள் கழித்து, எம்பாப்பே வழங்கிய பாஸை டெம்பலே கோலாக மாற்றி பிரான்ஸின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

காயம் காரணமாக அணியில் இடம் பெறாத இஸ்மாயில் சைபாரியின் இடத்தை நிரப்ப சரியான வீரர் இல்லாதது மொராக்கோவின் தாக்குதல் ஆட்டத்தில் தெளிவாகப் பிரதிபலித்தது. ஆட்டம் முழுவதும் பிரான்ஸ் பாதுகாப்புக்கு பெரிதாக சவால் விட முடியாமல் மொராக்கோ காலிறுதியில் வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் எம்பாப்பே தற்போது 8 கோல்களும், 3 கோல்களை அடிக்க ஏதுவான காரண கர்த்தாகவும் திகழ்ந்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அடையும் இலக்குடன் முன்னேறும் பிரான்ஸ், அரையிறுதியில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியத்தை எதிர்கொள்ள உள்ளது.

போட்டிக்குப் பிறகு பேசிய மொராக்கோ தலைமைப் பயிற்சியாளர் முகமது ஒவாஹ்பி, “இன்று நாங்கள் வெற்றிபெற விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. வெற்றிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். ஆனால் மிகவும் வலிமையான அணியை எதிர்கொண்டோம். இந்தத் தோல்வி ஏமாற்றம்தான். இருப்பினும், இதே பாதையில் தொடர்ந்து உழைத்தால் மொராக்கோ கால்பந்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்” என்று கூறினார்.

முக்கிய தருணங்கள்

>> 25வது நிமிடம் – பெனால்டி! கிலியன் எம்பாப்பேவை தடுக்க முயன்ற நௌசாயர் மஸ்ராவி தவறாக டேக்கிள் செய்ததால் பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

>> 28வது நிமிடம் – பெனால்டி தவறியது! நீண்ட இடைவேளைக்குப் பிறகு எம்பாப்பே எடுத்த பெனால்டியை மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனூ அபாரமாகத் தடுத்தார்.

>> 35வது நிமிடம் – அருமையான சேவ்! டெசிரே டுவே பந்தைப் பறித்து உருவாக்கிய வாய்ப்பில் புவாடியின் ஷாட்டை பௌனூ தடுத்தார்.

>> 45+2வது நிமிடம் – கம்பத்தில் பட்டது! லூகாஸ் டின்யே தொலைவில் இருந்து அடித்த வளைந்த ஷாட் குறுக்குக் கம்பத்தில் மோதியது.

>> 60வது நிமிடம் – கோல்! எம்பாப்பே துல்லியமான ஷாட்டால் பிரான்ஸுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

>> 66வது நிமிடம் – கோல்! எம்பாப்பேவின் பாஸை பெற்ற உஸ்மான் டெம்பேலே அடித்த ஷாட் பௌனூவைத் தாண்டி வலையில் புகுந்தது.

>> 76வது நிமிடம் – மாற்றம்! காயம் எதுவும் இல்லாதது போல் தெரிந்தாலும் எம்பாப்பே மாற்று வீரராக வெளியேறினார். பிற்பாடு சிறு காயம் ஏற்பட்டதாக அவரே தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here