ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் சறுக்கலைச் சந்தித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த பஞ்சாப் அணி அதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. இந்த இரண்டு தோல்விகளும் அந்த அணியின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. அவற்றை விரைவாகச் சரிசெய்வதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.
பஞ்சாப் அணியின் சரிவுக்கு முக்கிய காரணம் அவர்கள் தங்களின் சீரான ஆட்டத்திறனை இழந்ததே ஆகும். இந்த சீசனில் பேட்டிங்கில் அவர்கள் வெளிப்படுத்திய அதிரடி, அந்த அணியின் பந்துவீச்சில் இருந்த குளறுபடிகளை மறைத்துவிட்டது. ஆனால் தற்போது அந்த பலவீனங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானித்த முன்வரிசை பேட்ஸ்மேன்கள் கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர்.
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானொலி ஆகியோர் குறைந்த ரன்களில் நடையை கட்டினர். ஸ்ரேயஸ் ஐயர், நேஹல் வதேரா ஆகியோரும் கைகொடுக்கத் தவறியிருந்தனர். சூர்யான்ஷ் ஷெட்கே (57), மார்கஸ் ஸ்டோனிஸ் (40) ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதால் பஞ்சாப் அணியால் கவுரமான ஸ்கோரை எடுக்க முடிந்திருந்தது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், பஞ்சாப் அணி துல்லியமான ஆட்டத்தையும் தெளிவான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
இன்றைய போட்டி நடைபெறும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இதனால் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறும்.
ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் ஆகியோரின் பங்களிப்பைத் தவிர அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஹைதராபாத் அணி பலமுடன் திகழ்கிறது. கம்மின்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியது அவர்களின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இஷான் மலிங்கா, பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் போன்ற பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் இறுதிப்பகுதியில் துல்லியமாகப் பந்துவீசி வருகின்றனர். இந்த பந்துவீச்சு கூட்டணி பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
