ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றிபெற்றது.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 44 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். மும்பை அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
10 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் தொடர்கிறது. அதேவேளையில் லக்னோ அணிக்கு இது 7-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் நீடிக்கிறது.
தற்போதைய தோல்வியால் லக்னோ அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கடினமாகி உள்ளது. மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது: நாங்கள் பேட்டிங்கை தொடங்கிய விதத்துக்கு இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருக்க வேண்டும். எங்கள் வீரர்கள் தயக்கமின்றி விளையாடினார்கள். ஆனால் இறுதி பகுதியில் மும்பை வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.
ஏனெனில் இந்த ஆடுகளத்தின் சூழலில் அவர்கள் விளையாடி பழகிவிட்டனர். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய விதத்தைப் பார்க்கையில், அவர்களை விட முன்னிலையில் இருந்தோம். ஆனால் அதே சமயம், இது போன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களைக் குறை சொல்ல முடியாது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்காக அற்புதமான பணியைச் செய்து வருகிறார்கள்.
எனவே, அவர்களைப் பற்றி நான் அதிகம் ஒன்றும் சொல்ல முடியாது. எங்களுக்கு சற்று அதிர்ஷ்டமும் தேவை என்று நினைக்கிறேன். நிறைய ஆசீர்வாதங்கள் இருந்தால் மட்டுமே இது நடக்கும் என்று நினைக்கிறேன். மேலும், இதற்காக நாங்கள் நிச்சயமாக இன்னும் கூடுதல் முயற்சியை எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார். லக்னோ அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (7-ம் தேதி) ஆர்சிபி அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.
