டிஎன்பிஎல் 10-வது சீசன் போட்டி நேற்று திண்டுக்கலில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மோகன் பிரசாத் 17, உத்திரசாமி சசிதேவ் 17, இசக்கிமுத்து 15, முகமது அலி 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. திண்டுக்கல் அணி தரப்பில் புவனேஷ்வரன், நிரங்கர் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். சக்தி கருப்பசாமி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 108 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது. அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி சார்பில் அனுராக் 34, விமல் குமார் 33 ரன்கள் எடுத்தனர். சைனி, 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். நிரங்கர் சர்மா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
