Home விளையாட்டு செய்திகள் 2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு

2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு

0

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலத்துடன் 171 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்து 29 தங்கம், 45 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்களுடன் 2-வது இடமும், கனடா 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலத்துடன் 62 பதங்கங்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தன. இந்தத் தொடரில் மொத்தம் 10 விளையாட்டுகளில் 215 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஓவோ ஹைட்ரோ அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடைபெற்ற அணி வகுப்பில் இந்திய தேசிய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா ஏந்தி வந்தார்.

இதைத் தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட எடின்பர்க் பிரபு இளவரசர் எட்வர்ட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நிறைவு விழாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜோதியானது வரும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இசை, நடனம் மற்றும் கதைகூறல் அடங்கிய பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கொடி மைதானம் முழுவதும் வலம் வந்தது. தொடர்ந்து அந்த கொடியை கிளாஸ்கோ நகர மேயர் ஜாக்குலின் மெக்லாரன் ஸ்காட்லாந்து காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் துணைத் தலைவர் சூசன் ஜாக்சன் ஆகியோர் ஸ்காட்லாந்து நெட்பால் வீராங்கனை எமிலி நிக்கோலிடம் வழங்கினர்.

அவரிடம் இருந்து கொடியை பெற்ற காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் டொனால்ட் ருகாரே, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் கொடுத்தார். அவர், அதை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவிடம் வழங்கினார். இறுதியாக பி.டி.உஷா, குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஒப்படைத்தார்.

இதன் மூலம், போட்டியை நடத்தும் பொறுப்பு ஸ்காட்லாந்திலிருந்து இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத் நகரம் நடத்தவுள்ளது.

நிறைவு விழாவில் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடிகை மனுஷி சில்லார் தலைமையில் மனதைக் கவரும் நடன அமைப்பு இடம்பெற்றது. இசைக்கலைஞர் சங்கர் மகாதேவனின் எழுச்சி மிக்க இசை, மேற்கத்திய வாத்தியங்களின் பிரம்மாண்டத்தையும் இந்திய பாரம்பரிய இசையையும் அற்புதமாக ஒருங்கிணைத்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version