‘அன்பில் அவன்’ படத்தில் நடித்ததில் பெருமை: ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

0
28

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ படத்தை ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் அக்.2-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும்போது, “ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதை வரமாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் எனக்கு உணர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால், திரையரங்கில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. படம் ஓடிக்கொண்டிருந்தபோது, பக்கவாட்டுப் படிக்கட்டில் நின்றபடியே பார்க்கத் தொடங்கினேன். சுமார் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே முழுப் படத்தையும் பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது.

படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைத் தாண்டி, நாங்கள் உருவாக்கிய படத்தைப் பார்த்து பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது உண்மையிலேயே வரம். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும், இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here