குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.9.27 கோடியில் 61.84 லட்சம் கேக்குகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 61 லட்சத்து 84,566 ‘ஸ்பாஞ்ச் கேக்’ துண்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால டெண்டர் அறிவிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட டெண்டர் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக, தனித்தனி உறைகளில் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரே சுவையாக இல்லாமல் மிக்ஸ்டு ப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டர்/ மில்க் ஆகிய 4 சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட வேண்டும்.
கேக்குகள் தரமானதாக, மென்மையாக, பஞ்சு போல இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்டுப்போன துர்நாற்றம், செயற்கை ரசாயன சுவை இருக்கக் கூடாது.
டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் கேக்குகளில் சேர்த்திருக்கக் கூடாது. அதேபோல், பள்ளிகளில் நவ.14-ம் தேதியன்று கேக்குகள் விநியோகிக்கும்போது, குறைந்தபட்சம் மேலும் 30 நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈரப்பதம் புகாத தரமான உறைகளில் கேக் பேக்கிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உறைக்கு மேல் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) முத்திரை மற்றும் தமிழக அரசின் லோகோ கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் தரச்சான்றிதழ்களைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஆய்வுக் குழுவிடம் ஒவ்வொரு சுவையிலும் சாம்பிள் கேக்குகளை வழங்கி ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
கேக் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெறும் நிறுவனம், போக்குவரத்துச் செலவுகளை ஏற்று டிஎன்சிசி கிடங்குகளுக்கு நேரடியாக கேக்குகளை பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
