திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று (நவ.28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையினர் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து பாஜக, இந்து முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள் குவிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது. மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து கமாண்டர் சுனில் குமார் தலைமையில் 130 பேர் அடங்கிய மத்திய ரிசர்வ் படையினர் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு வந்தனர். அவர்கள் குழுவாக பிரிந்து திருப்பரங்குன்றம் கோயில் மலைக்கு செல்லும் வழி பாதைகளில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கமாண்டர் சுனில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் இருக்கும் பகுதி வழித்தடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கொடுப்பது கொடுத்த ஆய்வு செய்தனர். மேலும் பெங்களூரில் இருந்தும் மத்திய ரிசர்வ் படையினர் திருப்பரங்குன்றம் வருகின்றனர்.
மலை மற்றும் கோயில் தீபத்தூண் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருப்பரங்குன்றம் நகர் பகுதிகளில் மலையை சுற்றிலும் தமிழக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் தீபத்துணில் தீபம் ஏற்றுவதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தீபத் தூண் சுற்றிலும் கம்புகள் கட்டபடுகின்றன.
லைட் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பாஜக, இந்து முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களும்,பக்தர்களும் திருப்பரங்குன்றம் நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.
