காவல் துறை சீருடையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டதாக 14 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் சீருடையில் ரீல்ஸ் வெளியிட கூடாது என்று ஏற்கெனவே டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
எனினும், சில காவலர்கள் தொடர்ந்து சீருடையில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து, சமூக வலைதளங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் நடத்திய ஆய்வில், சென்னையில் மட்டும் சீருடையில் ரீல்ஸ் வெளியிட்ட 14 காவலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் சில காவலர்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களைக் கண்காணித்து, சீருடையில் ரீல்ஸ் வெளியிடும் காவலர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
