காஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் செங்கையில் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து நீதித் துறையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முதன்மை மாவட்ட, அமர்வு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிஅனிதா சுமந்த் நேற்று புதிய நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதேபோல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு என மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடத்தை புதுப்பித்து அதில் முதன்மை மாவட்ட மற்றும்அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, காஞ்சி எம்எல்ஏ எழிலரசன், ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2, நீதிபதியாக இருந்த செம்மல், தற்போது காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்த மேவிஸ் தீபிகாசுந்தரவதனா, செங்கை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.