பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி கிடையாது என்றும், ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் பூஜா மனோரமா திலீப்கேத்கர். இவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கான (ஓபிசி)இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரியும் அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பூஜா சிக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வுசெய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதுதெரியவந்துள்ளது. மேலும் அவர் மாற்றுத் திறனாளி இல்லைஎன்று அவர் எம்பிபிஎஸ் படித்தகல்லூரியின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 2007-ம் ஆண்டில் புனேயில் உள்ள காஷிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியில் பூஜா கேத்கர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநர் அர்விந்த் போரே கூறியதாவது: ஓபிசி நான்-கிரீமி லேயர் பிரிவில் பூஜா கேத்கர் படிப்பில் சேர்ந்தார். அவர் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் சேர்ந்தார். அவர் சமர்ப்பித்த மருத்துவத் தகுதிச் சான்றிதழில் அவருக்கு எந்தவிதமான குறைபாடும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் மாற்றுத் திறனாளி கிடையாது. இவ்வாறு அர்விந்த் போரே தெரிவித்தார்.
இதனிடையே பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கர் கூறும்போது, “பூஜா கேத்கருக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. எனவே, அவர் மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தது முறையானது. இதில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு 40 சதவீத பார்வைக் குறைபாடு உள்ளது. அவருக்கு முறையான பரிசோதனை நடத்திய பின்னர்தான் மருத்துவக் குழுவினர் சான்றிதழ் வழங்கினர்’’ என்றார்.