பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க காவல் துறையினரே ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித் துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “தற்போது தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் கொல்கத்தா காவல் துறை ஆதாரங்களை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினித் கோயல் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில், இரவுப் பணியில் இருந்த 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தப்படுகொலை தொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவரை காவல் துறை கைது செய்தது.இந்தப் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத்தொடங்கியது. அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப்கோஷ்மீது நிதி முறைகேடு, ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்தல் உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டல், முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
17-ம் தேதி வரை காவல்: இதனிடையே சந்தீப் கோஷ் மற்றும் காவல் துறை அதிகாரி அபிஜித் மண்டல் இணைத்து இவ்வழக்கின் ஆதாரங்களை அழித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருவரையும் நேற்று முன்தினம் சிபிஐ கைது செய்தது. இவ்விருவரையும் செப்டம்பர் 17-ம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க கொல் கத்தா நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.