பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 2-வது நாளாக தங்கவைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட 80 எம்எல்ஏக்கள் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள போர் பாயிண்ட் என்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தனர். மேலும், தவெக ஆட்சி அமைக்கும் வரை இந்த விடுதியில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும், தவெகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதால் விடுதியின் முகப்பு பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.















