நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
பின்னர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் போட்டியிடும் வாராணசி தொகுதியில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை கேதார்நாத் பயணம்: கடந்த 2019 மக்களவை தேர்தலும் 7 கட்டமாக நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற்றது. மே 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல தலைவர்களும் ஓய்வெடுக்க தொடங்கினர். பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார். சாம்பல் நிற அங்கி, இடுப்பில் காவி துணி, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி அணிந்திருந்தார். ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலுக்கு வந்து, அரை மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்தார். பிரதமர் எடுத்து வந்திருந்த சிறப்பு அங்கவஸ்திரங்கள் சிவலிங்கத்துக்கு சாற்றப்பட்டன.
இதன் பின்னர், கேதார்நாத்தில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அவர் தங்கியிருந்த அறையில் மின்சார வசதி கிடையாது. ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. செல்போன் நெட்வொர்க் செயல்படாது என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போதைய மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவது குறிப்பிடத்தக்கது.