நீட் விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி கிண்டல்

0
90

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், நடக்கும் சம்பவங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

இளநிலை நீட் தேர்வு, யுஜிசி-நெட் தேர்வு முறைகேடு தொடர்பாகசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வுஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

பாஜக ஆட்சியில் ஒட்டு மொத்த கல்வி முறையும், ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியும், மாணவர்களின் எதிர்காலமும், பேராசை மற்றும் முகஸ்துதி செய்யும் திறனற்றவர்களிடம் சிக்கியுள்ளது.

இதனால் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, ஒத்திவைப்பு போன்றவை நடைபெறுகின்றன. பாஜக அரசால் எந்தத் தேர்வையும் நியாயமாக நடத்த முடியவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பாஜக அரசு பெரிய தடையாக உள்ளது.

பாஜக.,வின் ஊழலை எதிர்த்துபோராடுவதில் மாணவர்கள் தங்கள்நேரத்தை வீணடிக்கின்றனர். பிரதமர் மோடி என்ன செய்வதென்று தெரியாமல், இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா, ‘‘நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணம் பிஹாரில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி. இதைமறைப்பதற்கு நீங்கள் போலி வீடியோக்களை வெளியிடுகிறீர்கள். மாணவர்களின் எதிர்காலத்துடன் எதிர்க்கட்சிகள் விளையாடக் கூடாது என்பதற்காகத்தான் மீதமுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன’’ என்றார்.