நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் செல்போன் ஷோரூமில் மேலாளராக சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த வீரராஜா (40) பணியாற்றி வந்தார். நேற்று (12-ம் தேதி) வீரராஜா பைக்கில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். பார்வதிபுரம் பகுதி களியங்காட்டில் உள்ள சிவன் கோயில் பகுதியில் வந்தபோது வீரராஜா நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் ஜல்லி ஏற்றி வந்த டெம்போ அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார். டெம்போ டிரைவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து டெம்போ டிரைவரை தேடிவருகின்றனர்.