இந்துக்களுக்கான நடத்தை விதிமுறை தயாரிக்கும் பண்டிதர்கள்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வெளியிட திட்டம்

0
418

70 பண்டிதர்களால் இந்து சமூகங்களுக்கான நடத்தை விதிமுறைகள் தயாராகி வருகின்றன. இவை, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளன.

இந்துக்களில் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளுக்கான நடத்தைவிதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. இந்துக்களின் பல்வேறுசமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் நடத்தை விதிமுறைகள் பெரும்பாலும் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டவையாகக் கருதப்படுகிறது.

காலப்போக்கின் மாற்றங்களால் சில தவறான சம்பிரதாயங்களும் இதில் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை சரி செய்யும் வகையில் இந்துக்களுக்கான நடத்தை விதிமுறைகளை தொகுத்து வெளியிடப்பட உள்ளது.இது, அடுத்த வருடம் ஜனவரியில் 351 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக, நாடு முழுவதிலும் இருந்து வேதங்களை நன்கு கற்றுணர்ந்த 70 பண்டிதர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு ஆண்டுகளாக ஆராய்ந்து உருவாக்கிய விதிமுறை இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு 2025-ல்வெளியிடப்பட உள்ளது. முன்னதாக இது, சங்கராச்சாரியார்கள், மகா மண்டலேஷ்வர்கள் மற்றும் தர்மாச்சாரியர்களால் அங்கீகரிக்கப்படும்.

இந்து சமூகங்களின் வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்து வகையான சம்பிரதாயங்களும் இந்த விதிமுறையில் இடம்பெற உள்ளன. கோயில்களில் கடவுள்களை வணங்குதல் முதல் பிறந்தநாளை கொண்டாடுவது வரையிலான நிகழ்வுகள் அதில் அடங்கும்.

குறிப்பாக, வட மாநிலங்களில் நிகழும் இரவுத் திருமணங்களை பகலில் நடத்துவதற்கான மாற்றங்களும் இந்த விதிமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சங்களாக, பெண்கள் வேதங்கள் பயிலவும், யாகங்கள் வளர்க்கவும் மீண்டும் ஊக்குவிக்கப்பட உள்ளனர். வேதங்களில்துவக்கக் காலத்தில் அனுமதிக்கப்பட்டு பிற்காலத்தில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘இந்து தமிழ் திசை’யிடம் வாரணாசியின் பண்டிதர்கள் வட்டாரம் கூறியதாவது: இப்பணி வாரணாசியிலுள்ள பழமைவாய்ந்த வித்வ பரிஷத் அமைப்பின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நடத்தை விதிமுறைகளில் மனு ஸ்மிருதி, பராஷர் ஸ்மிருதி மற்றும் தேவல் ஸ்மிருதி ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளும் சேர்க்கப்பட உள்ளன.

பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களின் கொள்கைகளும் இணைத்து வெளியிடப்படும். இவ்வாறு இந்தியக் கலாச்சாரப்படி தொகுக்கப்பட்ட நடத்தை விதிமுறைகளை முதல்கட்டமாக ஒரு லட்சம் பிரதிகளில் அச்சிட்டு நாடு முழுவதிலும் விநியோகிக்கப்பட உள்ளன. இவ்வாறு பண்டிதர்கள் தெரிவித்தனர்.

பாஜகவின் ஆட்சியால் நாடு முழுவதிலும் இந்துத்துவாவின் தாக்கம் ஏற்படத் துவங்கி உள்ளது. அதேசமயம், இந்துத்துவா மீதான விமர்சனங்களும் பெருகி உள்ளன. இந்நிலையை சமாளிக்கும் வகையிலும் இந்துக்களுக்காக சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இந்த புதிய நடத்தை விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இதன் பின்னணியில், மகா கும்பமேளா நடத்தும் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசும் உள்ளதாக தெரிகிறது. எனினும், இதை இந்து சமூகங்கள் இடையே அமலாக்குவது பெரும் சவாலாகவே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here