இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரிஸ்பன் போட்டியின் முடிவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் 26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த தனுஷ் கோட்டியன் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.
இன்று (24-ம் தேதி) ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லும் தனுஷ் கோட்டியன், மெல்பர்ன் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியினருடன் இணைவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தனுஷ் கோட்டியன் பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தில் களமிறங்கி 44 ரன்கள் சேர்த்திருந்தார். முதல்தர கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அவர், 101 விக்கெட்களையும், 2 சதங்களுடன் 1,525 ரன்களையும் சேர்த்துள்ளார்.
அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல்தான் சேர்க்கப்படுவதாக இருந்துள்ளது. ஆனால் அவர், விஜய் ஹசாரே தொடரில் முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்ற நிலையில் சொந்த காரணங்களுக்காக ஓய்வு கோரியிருந்தார். இதன் காரணமாக தனுஷ் கோட்டியன் தேர்வாகி உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கடைசி நேரத்தில் ஏதேனும் காயம் அடைந்துவிட்டால் அவர்களுக்கு மாற்று வீரர் தேவை என்பதால் தனுஷ் கோட்டியன் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படுதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 47 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சைம் அயூப் 94 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 3-வது சதமாக அமைந்தது.
பாபர் அஸம் 52, கேப்டன் முகமது ரிஸ்வான் 53, சல்மான் ஆகா 48 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ யான்சன், பிஜோர்ன் ஃபோர்டூயின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து திருத்தியமைக்கப்பட்ட இலக்குடன் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார்.
கோர்பின் போஷ் 40, ராஸி வான் டெர் டஸ்ஸன் 35, டோனி டி ஸோர்ஸி 26, மார்கோ யான்சன் 26 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சூபியான் முகீம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
அந்த அணி முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. முன்னதாக இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என வென்றிருந்தது. குறுகிய வடிவிலான தொடர்களை அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் தொடங்குகிறது.