“கர்நாடகாவில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகள் மட்டுமே பாடப்படும்” – டி.கே.சிவகுமார் உறுதி

0
18

அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவையே தனது அரசு பின்பற்றும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “எனது கட்சியின் கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எங்கள் கட்சி என்ன முடிவு செய்துள்ளதோ, அதில் நான் உறுதியாக இருக்கிறேன். ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸின் முடிவை எனது அரசு உறுதியாக பின்பற்றும்.

எனது கவனத்துக்கு வராமலோ அல்லது ஆளுநர் மாளிகையிலோ வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில், எந்தவொரு அரசு நிகழ்ச்சியிலும், நாங்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி இரண்டு பத்திகளை மட்டுமே பாடும் நடைமுறையைப் பின்பற்றுவோம்.

இது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கொண்ட நாடு. நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். சூரியன், நீர் அல்லது காற்றில் மதம் ஏதுமில்லை. இவற்றை உங்களால் மாற்ற முடியாது; மற்ற அனைவரும் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் நீங்களும் சுவாசிக்க வேண்டும், அதே நீரைத்தான் பருக வேண்டும். அப்படியிருக்க, காற்று, நீர், தாவரங்கள் அல்லது சூரியனில் மதம் ஏதேனும் உள்ளதா?.” என்றார்.

அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாடலை கட்டாயமாக்கி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற 1937-ஆம் ஆண்டின் தீர்மானத்தை காங்கிரஸ் செயற்குழு கடந்த வாரம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

‘வந்தே மாதரம்’ பாடலின் பிந்தைய வரிகளில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி போன்ற இந்து பெண் தெய்வங்கள் குறிப்பிடப்படுவதாகவும், இதனால் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here