கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

0
74

கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் வடிவில் ஆபாச நடனங் களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றைவிசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பல்வேறு கலை, கலாச்சாரம் கொண்ட மாநிலம். இந்த கலை, கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஆர்வம் கொள்ளாமல், சினிமா பாடல்களை அதிக அளவில்விரும்புகின்றனர். ஆடல், பாடல் நிகழ்வுகளில் ஆபாச நடனம், ஆபாசபாடல்கள் இடம் பெறுகிறது என்று அரசுத் தரப்பில் கூறப்படுவதை புறக்கணிக்க முடியாது. முந்தைய ரிக்கார்டு டான்ஸ் காபரே நடனமாக மாறி, தற்போது ஆடல், பாடல் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்களுக்கு மக்களிடம் வரி வசூலிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை இளைஞர்கள் குழு நீர்நிலையை தூர்வாரப் பயன்படுத்தினர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இப்பணியை மேற்கொண்ட இளைஞர் குழுவுக்கு, பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த உதவியால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அந்த இளைஞர் குழு200 நீர்நிலைகளைத் தூர்வாரி யுள்ளது. இப்படி பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், இன்னும் அதிகம் சாதிக்கலாம்.

ஆடல், பாடலில் ஆபாசம் இருக்கக் கூடாது. இளைஞர்கள் மனதை கெடுக்கும் வகையில் அவை இருக்கக் கூடாது. ஆடல், பாடல் வடிவில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். ஆபாச நடனம், இரட்டை அர்த்த பாடல்கள், சாதி, மதப் பாடல்கள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்னைகள் விதித்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.