தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0
82

தமிழக பொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், பொதுத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத்துறையின் செயலராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் எஸ்.நாகராஜன், நிதித்துறை செலவினப்பிரிவு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள சிஜிதாமஸ் வைத்யன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகவும், சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலராகவும், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் டி.அன்பழகன், சர்க்கரைத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்பழகன் 16-வது நிதி ஆணையத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் செயல்படுவார்.

சென்னை மாநகராட்சியின் பணிகள் பிரிவு இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராகவும், ஈரோடு மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னைமாநகராட்சியின் பணிகள் பிரிவு துணைஆணையராகவும், புவியியல், சுரங்கத்துறை ஆணையர் பூஜாகுல்கர்ணி, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பூஜா குல்கர்ணி நிதித்துறை சிறப்பு செயலராகவும் செயல்படுவார்.

சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டிஆர்டிஓ திட்ட அதிகாரியான பி.அலர்மேல்மங்கை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநராகவும், சேலம் சாகோசர்வ் மேலாண் இயக்குநர் லலித்தாதித்யா நீலம் சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டிஆர்டிஓ திட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.