சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தப்பாடலை உடனடியாக நீக்கி, ஏழுமலையான் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி, தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட், சந்தானம், தி ஷோ பீப்பிள் தயாரிப்பாளர் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.