நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் பந்து வீசிய நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் மீண்டும் கலீல் பந்து வீச்சில் ரியான் ரிக்கல்டன் ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்திருந்தார். அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் வில் ஜேக்ஸ் அவுட் ஆனார். 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்தக் கூட்டணியை பிரித்தார் நூர் அகமது. சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்திருந்தார் தோனி. நடுவர் ரிவ்யூ செய்வதற்குள் சூர்யகுமார் யாதவ் பெவிலியன் திரும்பி விட்டார்.
நூர் அகமது வீசிய இன்னிங்ஸின் 13-வது ஓவரில் ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மாவை வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் நமன் 17 ரன்கள், சான்ட்னர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. போல்ட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தீபக் சஹார் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி.
சென்னை அணி சார்பில் நூர் அகமது 4, கலீல் அகமது 3, நாதன் எல்லிஸ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை விரட்டுகிறது. இந்த ஆட்டத்தின் ஆடுகளம் புதியது என்பதால் தாங்கள் பந்து வீச முடிவு செய்ததாக டாஸின் போது சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.