தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக ஷாஜகான், பொதுச்செயலாளராக சம்பத், பொருளாளராக ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மே 26-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து இந்த தேர்தல் தொடர்பாக இருதரப்பினரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்தகூட்டமைப்பின் துணை விதிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. 18-வது துணை விதியின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் தேர்தல் நடந்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமா, அல்லது மறுதேர்தல் வரை நீடிக்குமா என்பது தெளிவாக இல்லை.
இருதரப்பினரும் சங்க விதிகளில் உள்ள குறைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கூட்டமைப்பின் வங்கிக் கணக்கில் இருந்து தனிநபரின் வங்கி கணக்குக்கு ரூ.30 லட்சத்தை காசோலை மூலம் மாற்ற முயற்சித்துள்ளனர். வங்கி நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே, இந்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான பி.தேவதாஸை நியமிக்கிறேன். அவருக்கு தேவையான உதவிகளை சென்னை காவல் ஆணையர் செய்து கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.