பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்மு மண்டலத்துக்குட்பட்ட எல்லை கிராமங்களில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட தீவிரவாத குழுக்கள், ஊடுருவல்காரர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தருவது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், தீவிரவாத ஆதரவாளர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடன் இருந்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.