மகாராஷ்டிராவில் நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக கூறி சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “ நாக்பூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியான இவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாக்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்துக்கு காரணம் தனிநபரா அல்லது அமைப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாக்பூரில் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,200 பேருக்கு எதிராக புகார் பெறப்பட்டுள்ளது. இதில், 200 பேருக்கும் குறைவான பெயர்கள் மட்டுமே இதுவரை தெரியவந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட எஞ்சிய நபர்களை வலைவீசி தேடி வருகிறோம்” என்றனர்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் கூறுகையில், “ நாக்பூரில் நடைபெற்ற கலவரம் அடையாளம் தெரியாத நபர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி” என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில்தான், கலவரத்தை தூண்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளூர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக நாக்பூரில் இரு சமூகத்தினரிடையே திங்கள்கிழமை வன்முறை மூண்டது. இதில், 33 காவல் துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த கலவரத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும். நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன.