நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கலந்து கொண்டு பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காகவும், அறிவியல் ஆா்வத்தை தூண்டி புதிய படைப்புகளை உருவாக்கிட வழிகாட்டும் விதமாகவும் மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘நெக்ஸ்ட்ஜென் குமரி ’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவா்களுக்கு ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் நடைபெற்றது.
இதில், அறிவியல் ஆா்வமும் உற்சாகமுமிக்க மாணவா்கள் 40 பள்ளிகளிலிருந்து வருகை புரிந்துள்ளீா்கள். உங்கள்அனைவருக்கும் பாராட்டுகள். மாணவா்களிடம் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சிந்தனைகளை ஊக்குவிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.
அதைத் தொடா்ந்து, ஆட்சியா் மாணவா்கள் தயாரித்த ராக்கெட்டுகளை மாணவா்களுடன் இணைந்து விண்ணில் செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ்ஆரோக்கியராஜ், கல்விஅலுவலா்கள், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள், துறைஅலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.















