3-வது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி: முழுமையாக தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை

0
87

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு 0-3 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதையடுத்து சுழற்பந்து வீச்சில் தடுமாறத் தொடங்கியுள்ளது என்ற விமர்சனம் இந்திய அணி மீது எழுந்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்திருந்தது.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3-வது போட்டி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 235 ரன்களும், இந்திய அணி 263 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 5, அஸ்வின் 3, வாஷிங்டன், ஆகாஷ்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. எளிதான இலக்கு என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் எண்ணியிருந்தனர்.

ஆனால் முதல் இன்னிங்ஸை போலவே 2-வது இன்னிங்ஸிலும் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, கேப்டன் ரோஹித் 11, ஷுப்மன் கில் 1, விராட் கோலி 1, சர்பிராஸ் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இதனால் 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி சரிவுக்குள்ளானது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரிஷப் பந்த்தும் நிதானமாக விளையாடினர். ஆனால் ஜடேஜாவை 6 ரன்களில் வீழ்த்தினார் அஜாஸ் படேல். வாஷிங்டன் சுந்தர் 12, ஆகாஷ் தீப் 0, ரவிச்சந்திரன் அஸ்வின்8 ரன்களில் அவுட்டாயினர். ரிஷப் பந்த் மட்டும் தனி ஆளாக போராடி 64 ரன்கள் எடுத்தார். 29.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அஜாஸ் படேல் 6, கிளென் பிலிப்ஸ் 3, மேட் ஹென்றி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்கள் வீழ்த்திய அஜாஸ் படேல் ஆட்ட நாயகனாகவும், வில் யங் தொடர் நாயகனாகவும் தேர்வாயினர்.

இந்நிலையில் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி தடுமாற்றம் காண தொடங்கியுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்பது தெரிந்ததே. மேலும், இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் எல்லாம் சுழற்பந்து வீச்சுக்குஏற்றவை என்ற கருத்தும் உள்ளது. ஆனால் சிறப்பாக ஆடக்கூடிய சுழற்பந்து வீச்சிலேயே இந்திய அணியினர் இம்முறை வீழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 16 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் சுழற்பந்து வீச்சில் இந்திய அணி சரணடைந்து விட்டது என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்த மண்ணிலேயே இந்திய கிரிக்கெட் அணி 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக முழுமையாக இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here