ரஷ்யா – சென்னை இடையே புதிய கடல்வழி பாதை

0
44

ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டம் மாஸ்கோவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 17-ம் நூற்றாண்டிலேயே குஜராத்தை சேர்ந்த வணிகர்கள் ரஷ்யாவின் அஸ்ட்ராகான் நகரில் குடியேறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மும்பை – ரஷ்யாவின் அஸ்ட்ராகான் துறைமுகங்கள் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

அடுத்ததாக, இந்தியாவின் சென்னை – ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் துறைமுகங்கள் இடையே புதிய கடல்வழி போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு புதிய உச்சத்துக்கு செல்கிறது.

21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். நாம் அமைதியை முன்னிறுத்துகிறோம். எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்தியா முதல் நபராக களமிறங்குகிறது. உலகத்தின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் செலவால் தற்போது இந்தியாவுக்கான நிலக்கரி ஏற்றுமதி குறைந்துவிட்டது. இதற்கு மாற்றாக, ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு புதிய கடல்வழி பாதையில் நிலக்கரி ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல் வந்தடைய 45 நாட்கள் ஆகிறது. ஆனால், விளாடிவாஸ்டோக்கில் இருந்து சென்னைக்கு 15-20 நாட்களில் சரக்கு கப்பல் வந்தடையும். இந்த புதிய வழித்தடத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், திரவ இயற்கை வாயு, உரங்களை சென்னைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.