நவீன பொறியியலின் அற்புதம் புதிய பாம்பன் பாலம்: புகைப்படத்தை வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்

0
20

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம் நவீன பொறியியலின் அற்புதம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 105 ஆண்டு பழமையான பாலத்துக்கு மாற்றாக நவீன பொறியியல் முறைப்படி புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இது, “நவீன கால பொறியியலின் அற்புதம்”. மேலும், இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் என்ற பெருமையையும் இப்பாலம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் “வேகம், பாதுகாப்பு மற்றும் புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

1914-ம் ஆண்டு கட்டடப்பட்ட பழைய பாம்பன் பாலம் 105 ஆண்டுகளாக ராமேஸ்வர தீவை இணைத்து வந்த நிலையில் அதன் தூண்கள் அரிக்கப்பட்டதால் 2022 டிசம்பரில் அதன் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது புதிய பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு இந்தியாவின் நவீன பொறியியல் சாகப்தம் உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பழைய பாலம், மேனுவல் ஷெர்சல் லிப்ட் ஸ்பான், சிங்கிள் டிராக், 19 மீட்டர் காற்று அனுமதியுடன் குறைந்த வேக ரயில்களை மட்டுமே இயக்கும் தன்மை கொண்டது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில், முழு தானியங்கி செங்குத்து லிப்ட் ஸ்பான் உடன் 22-மீட்டர் காற்று அனுமதியுடன் மின்மயமாக்க இரட்டை வழித்தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க முடியும்.

இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் கட்டுமானம் ரூ.535 கோடி செலவில் ரயில் விகாஸ் நிகாம் மூலம் (ஆர்விஎன்எல்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ராமேஸ்வரம் ரயில் இணைப்பு மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகளும் விரிவடையும். நவீன பொறியியல் முன்னேற்றத்தின் சின்னமாக இந்த பாலம் விளங்குகிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாம்பன் பாலத்தில் குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளதையடுத்து, அதுகுறித்து விரைந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர்கள் (பாலங்கள்) வழிகாட்டுதலின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here