சத்தீஸ்கரில் சட்டவிரோத மதமாற்றத்தை எதிர்கொள்ள புதிய கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் அஜய் சந்திரகர் பேசுகையில், “மாநிலத்தில் அப்பாவிகள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளை தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. சுகாதாரம், கல்வி, சமூகப் பணி போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்று, அந்தப் பணத்தை மதமாற்றப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றன” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா அளித்த பதிலில், “அரசு சாரா அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் இல்லாததால் மாநிலத்தில் மதமாற்றம் அதிகரித்து வருவதாக உறுப்பினர் கூறுவதை ஏற்க முடியாது. இது தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படுகிறது. 1968-ம் ஆண்டு சத்தீஸ்கர் மத சுதந்திர சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தரப்படுகிறது” என்றார்.
அமைச்சர் விஜய் சர்மா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சத்தீஸ்கரில் சட்டவிரோத மதமாற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வருவோம். அரசு சாரா அமைப்புகள் தொடர்பான தணிக்கைகள் முறையாக செய்யப்படவில்லை என எங்களுக்கு புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்” என்றார்.