மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், நாக்பூரில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ என்ற பெயரில் திரைப்படமாக இந்தி மொழியில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பாராட்டி கோஷமிட்டது சர்ச்சையானது.
இதனிடையே, சத்ரபதி சம்பாஜி நகரில் (அவுரங்காபாத்) உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாக்பூரின் மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது, சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர். மேலும் அவுரங்கசீப்பின் உருவப்படத்தை எரித்தனர். இதில் மத நூலும் எரிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு வதந்தி பரவியது. இதுதவிர மேலும் சில வதந்திகள் பரவின. இதையடுத்து, நாக்பூரின் ஹன்சபுரி பகுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அத்துடன் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது போலீஸார் மீது அந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: அவுரங்கசீப் சமாதியை அகற்றக்கோரி விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, சமாதியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். ஆனால், உருவ பொம்மையில் மத நூல் இருந்ததாக வதந்தி பரவி உள்ளது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் சம்பவ இடத்துக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
அப்போது வீடுகள் மற்றும் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அந்த கும்பலை கலைத்துள்ளனர். இதில் காவல் துறை துணை ஆணையர் உட்பட பல போலீஸார் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான கற்கள் வீசப்பட்டிருந்தன. இதன்மூலம் இது திட்டமிட்ட சதி என தெரிய வருகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளியூரிலிருந்து வந்துள்ளனர்: மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாக்பூர் நிலவரத்தை முதல்வர் கண்காணித்து வருகிறார். இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளியூரிலிருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தருணத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது” என்றார்.
இதுகுறித்து மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கதம் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நாக்பூர் வன்முறை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம். இந்தசம்பவத்தில் 33 போலீஸாரும் பொதுமக்களில் 6 பேரும் காயமடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் ஆதித்ய தாக்கரே கூறும்போது, “பாஜக கூட்டணி அரசு மகாராஷ்டிராவை மணிப்பூர் மாநிலத்தைப் போல மாற்ற முயற்சிக்கிறது” என்றார்.
ஊரடங்கு உத்தரவு: நாக்பூரில் கலவரம் பாதித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பொருள் விநியோக சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.