பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை பாஜக கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடன் தற்போது என்டிஏ.வின் பலம் 292 ஆக உள்ளது. இதில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை கேரளாவின் மலப்புரம் தொகுதியில் மட்டும்பாஜக களமிறக்கியது. பாஜகசார்பாக மலப்புரத்தில் போட்டியிட்ட அப்துல் சலாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது பஷீரிடம் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘பாஜக மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியுமே ஒரு முஸ்லிம்கூட இல்லாத, ஒரு கிறிஸ்தவர்கூட இல்லாத, ஒரு பவுத்தர்கூட இல்லாத,ஒரு சீக்கியர்கூட இல்லாத கூட்டணியாகும். ஆனால், பாருங்கள் இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.